ஒரு விசேஷத்திற்கு - உபநயனமோ, ஸீமந்தமோ, க்ரஹப் பிரவேசமோ, விவாஹமோ - எப்படி நல்ல நாள், நல்ல நேரம் கணிப்பது எப்படி என்பதை பார்ப்போம். முஹூர்த்த நிர்ணயம் செய்யும் க்ரமம் (வரிசை):- பாம்பு பஞ்சாங்கத்தை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் யாருக்கு விசேஷம் நடக்கப்போகிறதோ அவரது ஜன்ம நக்ஷத்திரத்தையும், அது எத்தனையாவது நக்ஷத்திரம் (அஸ்வினி - ரேவதி வரிசையில்) என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள். உபநயனம் என்றால் அந்தப் பையன், சீமந்தம் என்றால் அந்தப் பெண். 1. எந்தத் தமிழ் மாதத்தில் முஹூர்த்தம் பார்க்கவேண்டுமோ அந்த மாதத்தில் செவ்வாய், சனி ஆகிய நாட்களை அடித்து விட்டு மற்ற நாட்களை எழுதிக் கொள்க. [ஞாயிறு, திங்கள் ஒரு கண்ணுள்ளவை; புதன், வியாழன், வெள்ளி இரண்டு கண்ணுள்ளவை; செவ்வாய், சனி கண்ணில்லாதவை. எனவே செவ்வாய், சனியில் எந்த விசேஷமும் செய்யக்கூடாது; ஞாயிறு திங்கள் மத்திமம்; புதன், வியாழன், வெள்ளி மிகவும் சிறந்தவை] 2. மரண யோகம் என்று போட்டிருக்கும் நாட்களையும் அடித்து விடுங்கள். 3. தீதுறு நக்ஷத்திரங்கள் (ஆகாத நக்ஷத்திரங்கள்) என சில நக்ஷத்திரங்கள் உள்ளன -- ப...